மொபட் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 12-ஆம் வகுப்பு மாணவர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உண்டார்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கதிரவன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று கதிரவனுக்கு பிறந்தநாள். இதனால் கதிரவன் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இரவு நேரத்தில் விடுதியை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் சின்னாளப்பட்டியை சேர்ந்த தினேஷ், நர்சிங் கல்லூரி மாணவி ஆகியோருடன் கதிரவன் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதனையடுத்து 3 பேரும் ஒரே மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் வெள்ளோடு பிரிவில் இணைப்பு சாலையில் கதிரவன் மொபட்டை திருப்பியுள்ளார். அப்போது சின்னாளபட்டி நோக்கி சென்ற சரக்கு வேன் மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கதிரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷ் மற்றும் கல்லூரி மாணவியை போலீசார் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கதிரவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.