கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழில் அதிபரை மிரட்டி ரூபாய்.200 கோடி மோசடி செய்து இருக்கிறார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சுகேஷ், அவருடைய மனைவி ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இவ்வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்திருந்தது.
மோசடி பணத்தில் ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. அதன்பின் நடிகை நோரா ஃபதேகியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த மோசடி வழக்கு பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் (02-09-2022) இவரிடம் 7 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில், நேற்று 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவ்விசாரணையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுகேஷ் சந்திரசேகரின் மனைவி தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னுடன் வந்து பேசியுள்ளதாகவும் நோரா ஃபதேகி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.