Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடியிடம் சொல்லுங்கள்…!”முதல் கட்ட வெற்றி கிடைத்து விட்டது” ஸ்டாலின் வேண்டுகோள் …!!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழக்கத்தின் முதல் கட்ட வெற்றி என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இட ஒதுக்கீட்டுக்காக திமுக தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து எழுதிய சமூக நீதி இலட்சிய முழக்கம் தேசிய அளவில் எதிரொலித்து இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பதாக அக்கட்சித் தலைவர் திரு ஜேபி நடடா அவர்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இட ஒதுக்கீடு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமை என்று மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான் அவர்களும் அறிவித்திருப்பதை மனதார வரவேற்கிறேன்.

அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் அளிக்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு ( ஓபிசி) கடந்த 3 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி திமுக தொடர்ந்து போராடி வருகிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு அமைதி காத்ததன் விளைவாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கில் இடஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என்ற அதிர்ச்சி தரும் கருத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எடுத்து வைத்து, உயர் நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி இருக்கிறார்கள். மாணவர்கள் நலன் கருதி உடனடியாக கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு குறித்த பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில் மூன்றாவது பகுதியில் அமைந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தன் கருத்தை தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து விட்டு ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும், பாஜகவின் செயல்பாட்டை உணர்ந்து எதிர்வினையாற்ற தொடங்கிவிடுவார்களோ என்று இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தை காலதாமதமாக தெரிவித்ததற்கு நன்றி. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340 தாம் விதிகளில் கூறப்பட்டவாறு இட ஒதுக்கீட்டையும், சிறப்பு விதிகளையும் சமூக நிலையிலும் ,கல்வியிலும் பின்தங்கிய பிரிவினர் முன்னேற்றத்திற்காக செயல்படுத்த மத்திய அரசு பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் வரிகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

அகில இந்திய அளவில் 27 சதவீத இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு உறுதி செய்யப்பட்டது செல்லும் என்று 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டில் 69% இடஒதிக்கீடு உறுதி செய்யப்பட்டு அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடங்களை வழங்க வேண்டும் என்பது தான் திமுக கோரிக்கை. 9550 முதுநிலை மருத்துவ கல்விக்கான இடங்களில் 371 மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைப்பது அப்பட்டமான சமூக அநீதி மட்டுமல்ல, உச்சநீதிமன்றமே உறுதி செய்த சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் புறம்பானது.

திரு. நட்டா அவர்கள் குறிப்பிட்டிருப்பது உண்மை எனில் நடந்து முடிந்துள்ள சேர்க்கை ரத்து செய்துவிட்டு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக செயல்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு ஆணையிடுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை பாஜக தேசிய தலைவர் நட்டா அவர்கள் வலியுறுத்த வேண்டும். மத்திய அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான் அவர்களும் உரிய அழுத்தம் தர வேண்டும். அனைத்து இடஒதுக்கீடுகளையும்  இந்திய அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நம்பிக்கையுடன் வலியுறுத்துகிறேன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |