மோடியின் ஊடகங்கள் பற்றி எங்களுக்கு எந்த ஒரு அச்சமும் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார்.
பீகாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், அதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் வருகின்ற ஏழாம் தேதி நடைபெறுகிறது. அந்த தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், பீகாரில் அராரியா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறும்போது, “மோடியின் வாக்கு இயந்திரத்தை கண்டு அச்சப்பட மாட்டோம். மோடியின் ஊடகங்கள் பற்றி எங்களுக்கு எந்த அச்சமும் கிடையாது. இளைஞர்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்த முறை இவிஎம் ஆக இருந்தாலும் சரி எம்விஎம் ஆக இருந்தாலும் சரி எங்கள் கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும்” என்று அவர் கூறியுள்ளார்.