நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமம் தோறும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தார் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு நேற்று முன்தினம் தடுப்பூசி போடும் சுகாதார குழுவினர் சென்றுள்ளனர். அப்போது கிராமத்தினர் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், ஒரு கிராமவாசி மட்டும் தனது மனைவியுடன் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். அப்போது அவரிடம், யார் வந்தால் நீங்கள் தடுப்பூசி போட்டு கொள்வீர்கள் என்று சுகாதார குழுவினர் கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த கிராமவாசி, ஒரு மூத்த அதிகாரி வந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு துணை கோட்ட மாஜிஸ்திரேட்டு வந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்வீர்களா என்று குழுவினர் கேட்டபோது, துணை கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் சொல்லி பிரதமர் மோடியை வர சொல்லுங்கள். அவர் இங்கு வந்தால் தான் நான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.
எவ்வளவு கூறியும் அவர் ஒப்புக் கொள்ளாததால் சுகாதார குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து அந்த கிராமவாசியின் மீண்டும் மனைவி அவரையும் அவரின் மனைவியையும் தடுப்பூசி போடுவதற்கு சம்மதிக்க வைப்போம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.