பிரதமர் நரேந்திர மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த கட்டுரைக்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த கட்டுரையில் இசைஞானி இளையராஜா என்ன தெரிவித்தார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அந்த கட்டுரையில் ” இந்த இரண்டு ஆளுமை கொண்ட மனிதர்கள் சமூகத்தில் பலவீனமான சமூகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றி பெற்றனர். இருவரும் வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகளை நெருக்கத்தில் இருந்து பார்த்தவர். இருவரும் இந்திய நாட்டுக்காக பெரிய கனவு கண்டனர்.
மேலும், இருவரும் வெறும் சிந்தனை செய்வதில் மட்டும் இருந்து விடாமல் செயலில் நம்பிக்கை கொண்ட உண்மையான மனிதர்கள். சமீபத்தில் பிரதமர் மோடி அரசு பெண்களின் திருமண வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாக செய்தியில் படித்தேன். இது பெண்களின் மேற்படிப்புகள் மேற்கொள்வதற்கு ,குறிப்பாக கிராமங்களில் பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிக்கும். இலவச எல்.பி.ஜி இணைப்பு வழங்கும் திட்டமும், பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவது குறித்த பிரதமரின் செய்தியும், பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பணியை நினைக்கும்போது நினைவுக்கு வருகிறது.
முத்தலாக் தடை மற்றும் பாலின விகித உயர்வு போன்ற பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை கவனித்திருந்தால் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பெருமை பட்டிருப்பார். அவரது கனவுகளை நிறைவேற்றும் வகையில் இந்தியா எவ்வாறு நகர்கிறது என்பதை இந்தப் புத்தகம் மக்களுக்கு தெரிவிக்கும் என்று நம்புகிறேன்” என இளையராஜா தெரிவித்திருந்தார். இந்த கட்டுரைக்கு இடதுசாரிகள் மற்றும் தமிழ்நாட்டு ஆளுங்கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.