டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகக், கூறிவிட்டு மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு குற்றம் சாட்டியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் இன்று, 34-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் படி, மத்திய அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவான அகில இந்திய கிசான் சங்கர்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இல்லை என குற்றம் சாட்டியுள்ளது.
பேச்சுவார்த்தை தொடர்பான விஷயத்தில், மத்திய அரசு தொடர்ந்து இரட்டை வேடம் போடுவதாகவும் அந்த அமைப்பு விமர்சித்துள்ளது. விவசாயிகளின் நிலம் பறிபோகாது எனக்கூரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், வேளாண் சட்டத்தின் 9-வது மற்றும் 14வது பிரிவை படித்துப் பார்க்க வேண்டுமெனவும், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு பதிலளித்துள்ளது.