இந்தியாவிலிருந்து மோடி அரசை துரத்துவது ஒன்றும் கடினமல்ல என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். அவர் நேற்று தூத்துக்குடி வஉசி கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினார். அங்கு தூத்துக்குடி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இதனையடுத்து நெல்லை பாளையங்கோட்டையில் இருக்கும் செயின்ட் சேவியர் கல்லூரியில் இன்று கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், “கல்விக்கான தனிக் கொள்கையை உருவாக்க வேண்டும். பொருளாதார ரீதியாக பல மாணவர்களுக்கு மட்டுமே கல்வி என்பதை நான் நம்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகையை அதிகப்படுத்துவோம். மிக பலமாக இருந்த பிரிட்டிஷ் அரசை 74 ஆண்டுகளுக்கு முன்பு நாம் துரத்திவிட்டோம். பிரிட்டிஷாரை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது ஒன்றும் கடினமான வேலை அல்ல. கல்வி மற்றும் சுகாதாரத்தை ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.