மகராஷ்டிரா மாநிலம் புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாஜக தொண்டரான மயூர் முண்டே(37) என்பவர் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே, அதில் இருந்த மோடியின் சிலையை மயூர் முண்டே அகற்றி விட்டார். சிலையை அகற்றியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை. அவர் யாராலும் மிரட்டப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை.
இந்தநிலையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் திடீரென மோடி கோவில் முன்பு திரண்டு போராட்டம் செய்தனர். அப்போது அந்த கட்சியின் புனே நகர பிரிவு தலைவர் பிரதாப் ஜக்தாப் கூறுகையில், “மோடிக்கு கோவில் கட்டிய பிறகு எரிபொருள் விலை குறையும். மக்கள் தங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நகரத்தில் நிலவியது. எனினும், நாங்கள் இங்கு வந்து பார்த்தோம். கடவுளை கோவிலில் காணவில்லை” என்று கிண்டலாக தெரிவித்தார். கோவிலை கட்டியவராலேயே சிலை அகற்றப்பட்டதும், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தாலும் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.