வேளாண் சட்டங்கள் ரத்து செய்ததை தொடர்ந்து நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி பரவலாக இருந்து வருகிறது.
விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லியில் போராட்டம் நடத்திவரும் அவர்களுடன் மத்திய அரசு பத்து கட்டங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியும் அத்தனையும் தோல்வியில் முடிந்தது. இந்தப் போராட்டத்துக்கு உலக அளவில் ஆதரவுகள் வலுத்த போதிலும், மத்திய அரசு தனது முடிவில் நிலையாக இருந்தது. இந்நிலையில் குருநாத் ஜெயந்தியையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார்.
விவசாயிகளின் போராட்டம் இன்னும் ஒரு சில நாட்களில் ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றது. அதேசமயம் பஞ்சாப், உத்திரபிரதேசம் மாநிலங்களில் தேர்தல் வர உள்ளதால் தேர்தல் பயத்தில் தான் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும் பலரும் விமர்சனங்கள் செய்து வருகின்றன. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போல், நீட் தேர்வு எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகின்றது. வேளாண் சட்டங்களுக்கு எப்படி கடுமையான எதிர்ப்பு இருந்ததோ அதேபோல நீட் தேர்வுக்கும் நாடு முழுவதும் எதிர்ப்பு இருக்கின்றது.
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அனிதா தொடங்கி தனுஷ் வரை இந்த நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் ஏராளம். அதுமட்டுமில்லாமல் தற்போது நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது போல, மாணவர்களின் உயிர்களை காவு வாங்கி வரும் நீட் தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.