மிக அரிதாக இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வித்திட்ட அகமதாபாத் ஆடுகளம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் புகார் அளிக்க இங்கிலாந்து அணி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கு என்ற பெருமையை பெற்றுள்ளது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம். இங்கிலாந்திற்கு எதிராக இந்த அரங்கில் நடைபெற்ற பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினர், சுழலின் எங்களை அடித்துக்கொள்ள யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இரண்டு நாளிலேயே போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தனர். பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் மட்டும் ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 17 விக்கெட்டுகள் எகிறின. யாருமே எதிர்பாராத வகையில் 30.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி இரண்டாவது இனிங்ஸில் சுருண்டது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் மட்டும் 11 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக ஜொலித்தார். 1935ஆம் ஆண்டுக்கு பிறகு குறைந்த பந்துகளில் முடிவு காணப்பட்ட டெஸ்ட் போட்டியாகவும் அகமதாபாத் டெஸ்ட் போட்டி அமைந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் அப்போதே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இரண்டு நாட்களில் ஒரு டெஸ் போட்டி முடிவு என்பதை ரசிகர்கள் உட்பட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவர் விமர்சித்தார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு பேட்டியில், இதுபோன்ற வித்தியாசமான பிச்சு என முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் தலா மூன்று இன்னிங்ஸ் கேட்டிருப்போம் என சாடி இருக்கிறார். என்றாலும் அகமதாபாத் தோல்வியில் இருந்து இங்கிலாந்து அணி இன்னும் மீளவில்லை .
தொடரின் கடைசி டெஸ்ட்டும் இதே மைதானத்தில் நடைபெற இருப்பதால் என்ன செய்யலாம் என்று ஆழ்ந்த யோசனையில் உள்ளனர் கிரிக்கெட் வீரர்கள். இதனிடையே பிரச்சனைக்கு தீர்வு காண கிரிக்கெட் நீதிமன்றமான ICCயில் புகார் அளிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அணியின் பயிற்சியாளர் கிரிஸ் சில்வர் உட்டுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் நான்காவது போட்டியை அகமதபாத்தில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்ற ICC பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது .