வாலிபரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் நள்ளிரவு நேரத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தியை காட்டி மிரட்டி விக்னேஷிடம் இருந்த செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து விக்னேஷ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதனடிப்படையில் சுப்பிரமணி, மனோஜ்குமார், லோகேஷ், நாகராஜ், 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.