பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கிராமத்தில் வீரராகவன்-மேகலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் கருப்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல் வீரராகவனை தாக்கிவிட்டு மேகலா அணிந்திருந்த 12 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த வீரராகவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மேகலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை பிடிக்க சூப்பிரண்டு சிவராமன் தலைமையிலான தனிப்படை குழுக்களை அமைத்து உத்தரவிட்டார். அவர்கள் நடத்திய விசாரணையில் வீரராகவனை தாக்கிவிட்டு நகையை பறித்து சென்றது நிவாஸ், அறிவழகன், ராமகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 4 பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.