சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விஜயமாநகரம் புது ஆதண்டார் கொல்லை கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று வயதுடைய மலர்விழி என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மலர்விழி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குழந்தை மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்விழி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.