மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் சாலையில் தீபாவளி தினத்தில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதோடு, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கையில் வாணவெடியை வடிக்க செய்தார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர்கள் விழுப்புரம் சேவியர் காலணியில் வசிக்கும் நிவேஷ்(20) மற்றும் அகமது(22) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல், போக்குவரத்திற்கு இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.