ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரளயம் ஏலஞ்சிபுதூர்காரர் தோட்டத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பழனிச்சாமி குன்றி பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்தில் மக்காச்சோள அறுவடை பணிக்கு எந்திரத்துடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து வேலை முடிந்து பழனிச்சாமியும் அறுவடை இயந்திர ஓட்டுநர் நாகேஷ் என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். இவர்கள் அஞ்சனை பிரிவு என்ற இடத்தில் சென்ற போது திடீரென புதருக்குள் இருந்து காட்டு யானை வந்ததால் பயத்தில் இருவரும் அலறி சத்தம் போட்டனர். சிறிது நேரத்தில் நாகேஷ் மோட்டார் சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து பழனிச்சாமியும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பிக்க ஓடினார். அப்போது புதருக்குள் இருந்து வந்த மற்றொரு யானை அவரை துரத்தி துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. சிறிது நேரத்தில் இரண்டு யானைகளும் காட்டுக்குள் சென்றது. பிறகு நடந்தவற்றை நாகேஷ் கிராம மக்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.