தொழிலாளி மோட்டார் சைக்கிளுடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குடத்துப்பட்டி பிரிவு அருகே காவிரி கூட்டுக் குடிநீர் நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் 35 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து எரிக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது மர்ம நபர்கள் ஒருவரை கல்லால் தாக்கி மோட்டார் சைக்கிளுடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் சில்வார்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளியான கணேசன் என்பது தெரியவந்துள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். எரித்து கொலை செய்யப்பட்ட கணேசனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், பிரவீன், சஞ்சனா ஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.