கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீதி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தனூரில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கவியரசு(16), தமிழரசு(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசு 12-ஆம் வகுப்பும், தமிழரசு 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்த தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்ப்பதாக கூறி தமிழரசு பள்ளியிலிருந்து சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தமிழரசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தமிழரசுவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.