கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயங்குளம் பகுதியில் ரவீந்திரன்-ராஜகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஜிதா(29) என்ற மகளும், அஜின்(27) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அஜிதா நாகர்கோவில் ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அஜின் தனது அக்காவை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காப்பட்டினத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி மருந்து வாங்குவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முன்சிறை பகுதியில் சென்ற போது தனது தாய் ராஜகுமாரி கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததை அஜின் பார்த்தார்.
இதனால் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி தாயிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக தினேஷ் என்பவர் ஓட்டி வந்து மோட்டார் சைக்கிள் அஜினின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜின், அஜிதா, ராஜகுமாரி, தினேஷ் எபின் ஆகிய 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அஜின் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.