மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெம்பக்கோட்டை ஆற்று பாலம் வளைவில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து பலமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வீரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து படுகாயமடைந்த தர்மன் என்பவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே தர்மன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.