மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராபர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடன் அதே பகுதியில் வசிக்கும் பிரபு, ஜெயசிங் ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் 3 பேரும் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சாந்தி நகர் போலீஸ் குடியிருப்பு அருகில் சென்று கொண்டிருந்த போது கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
மேலும் படுகாயமடைந்த பிரபு மற்றும் ஜெயசிங் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராபர்டின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.