மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெஞ்சுக்காளிபாளையம் பகுதியில் சங்கரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளப்பட்டி பிரிவு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சங்கரன் சின்னதாராபுரத்திற்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒத்தமாந்துறை அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சங்கரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சங்கரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான லோகேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.