மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் பிரபு(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது நண்பரான நவீன்குமார்(22) என்பவருடன் சேலம் மாவட்டத்தில் உள்ள முத்துமலை முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர்கள் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆத்தூரில் இருந்து வேகமாக வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நவீன்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன் குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.