ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலிகாடு பகுதியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் குமார் கோபி குப்பைமேடு பகுதியில் இருக்கும் பணிமனைக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் ஜி.பி எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் இயக்கத்தை கண்டுபிடிக்கும் செல்போன் கணேஷ்குமாரின் மனைவி லட்சுமியின் கையில் இருந்தது. இதனால் கணேஷ் குமார் உடனடியாக தனது மனைவிக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து ஜி.பி.எஸ் கருவி சிக்னல் மூலம் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பவானி நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் லட்சுமி தனது உறவினர்களுடன் மோட்டார் சைக்கிளை சுமார் 27 கி.மீ தூரம் பின்தொடர்ந்து சென்று சிக்னல் மூலம் பவானி பழைய பேருந்து நிலையம் அருகே வைத்து அந்த நபரை மடக்கி பிடித்து மோட்டார் சைக்கிளை மீட்டனர். பின்னர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பி.ஏ பட்டதாரியான குணாளன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் குணாளனே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.