மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் பிரபாகரன்-கலா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ரேகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பிரபாகரன் தனது மனைவி மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டத்தில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர்கள் கிளாங்குளம் விலக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது பிரபாகரனின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த அரசு பேருந்து மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கலா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநரான வடிவேலு என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.