மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பனங்கொட்டை பகுதியில் கூலி தொழிலாளியான கபிலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலகுளம்-கட்டாரங்குளம் சாலையில் இருக்கும் இசக்கியம்மன் கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி கபிலனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கபிலனின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபிலனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.