மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டி லட்சுமி, உறவினர் யோகேஸ்வரன் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் எரியோடு-வடமதுரை சாலையில் இருக்கும் தனியார் நூற்பாலை விடுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது கோபாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த மினி வேன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மினி வேன் ஓட்டுநரான தனபால் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.