மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்மங்குடி கிராமத்தில் கண்டக்டராக மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விளாங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார் . அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையால்தான் அடிக்கடி இந்த பகுதியில் விபத்து நடப்பதாகவும், அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அக்பர், தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டனின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து ஆலோசனை செய்வதாக உறுதியளித்தனர். அதன் பின்னர் மணிகண்டனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.