மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருநிலா கிராமத்தில் பெரியசாமி(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அதே பகுதியில் வசிக்கும் பழனிமுத்து(37), வேலு(70) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். இந்நிலையில் கொரக்காவடி பகுதியில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெரியசாமி வேலு ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனிமுத்துவை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே கார் ஓட்டுநர் லேசான காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரியசாமி மற்றும் வேலு ஆகிய 2 பேரின் உடல்களை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.