மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி கிராமத்தில் உதயகுமார்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு(35) என்பவரும் கரூரில் இருக்கும் கல்குவாரியில் லாரி ஓட்டுநர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று உதயகுமார் தனது நண்பரான சேட்டுவுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் கரூர்-கோவை மெயின் ரோட்டில் மின் உற்பத்தி கழக அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர். அதே நேரம் கோவையில் இருந்து அரியலூர் நோக்கி சுகாஸ் ஹரி என்பவர் காரை வேகமாக ஓட்டி சென்று முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த உதய குமாரின் மோட்டார்சைக்கிள் மீது சுகாஸ் ஹரியின் கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த உதயகுமாரும் சேட்டுவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான சுகாஸ் ஹரி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.