மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள எடப்பாளையம் விவேகானந்தர் தெருவில் டிரைவரான விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜயன் தனது நண்பரான புவனேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இவர்கள் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் காந்தி நகர் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த லாரி விஜயனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜயன் மற்றும் புவனேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயன் மற்றும் புவனேஷ் ஆகிய இருவரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.