மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள பெருமாள் பட்டியில் ஓட்டுநரான அருண் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கால்நடை மருத்துவமனை அடுத்த நர்சரி கார்டன் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய குருசாமி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.