சென்ற 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மோர்பிநகரில் மச்சு நதி மீது 230 மீட்டா் நீளம் தொங்கு பாலமானது அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கியமான இடமாக இப்பாலம் விளங்குகிறது. கடந்த 6 மாதங்களாக அப்பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனை முன்னிட்டு மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து 5 நாட்களுக்கு முன்பு அக்டோபர் 26ம் தேதி குஜராத்தி புத்தாண்டன்று மீண்டுமாக திறக்கப்பட்டது.
அந்த பாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டமானது அலைமோதியது. தீபாவளிபண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலானோர் பாலத்துக்கு வந்திருந்தனா். இந்நிலையில் பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல் அப்பாலம் மாலை 6:30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். இவ்விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் பல பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையில் முப்படைகள், தேசிய பேரிடா் மீட்புப்படையினா், தீயணைப்புத்துறையினா் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் 15 மணிநேரத்துக்கு மேலாக தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன் விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி தெரிவித்தார்.