திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்த வசீம் அக்ரம்(43) நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் முன்னாள் நகர சபை உறுப்பினராக இருந்தவர். மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலத் துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவரை, காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசிம் அக்ரம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்தில் ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு உடலை கொண்டு வந்த பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது.
மேலும் கொலையாளிகளை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜீவா நகரில் வசித்து வரும் இம்தியாஸ், கஞ்சா விற்பனை செய்து வருவதாக வசீம் அக்ரம் தகவல் கொடுத்துள்ளார். அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இம்தியாஸ் கூலிப்படையை வைத்து வாசிம் அக்ரமை கொலை செய்துள்ளார். இதையடுத்து தப்பியோடிய 2 பேரை காஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக டிஐஜி கூறியுள்ளார்.