டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆவேஷ் கான் இடம்பெறாதது ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது..
ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கான அணிகளை ஒவ்வொரு நாடுகளும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கெடு விதித்திருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே அணியை அறிவித்து விட்டன.. இந்த நிலையில் ஆசிய கோப்பை முடிவடைந்த அடுத்த நாளே (நேற்று) இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) டி20 கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணியை அறிவித்துவிட்டது.
இந்த அணியில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்த பெரும்பான்மையான வீரர்கள் இடம் பிடித்து இருக்கின்றனர். அதே சமயம் ஒரு சில மாற்றங்கள் மட்டும் நிகழ்ந்துள்ளது. அணியில் மிக முக்கிய மாற்றமாக வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக சிறப்பாக பந்து வீசி வந்த அவர் இந்திய அணியில் இடம் பிடித்து, தொடக்கத்தில் நல்ல முறையாக பந்து வீசி வந்தார்..
ஆனால் கடந்த சில தொடர்களாகவே விக்கெட்டுகள் எடுக்க சிரமப்பட்டு தொடர்ச்சியாக ரண்களை வாரி வழங்கி சொதப்பி வருகிறார். இதனால் அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்தது.. இவர் டி20 கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் பக்குவப்படாமல் இருக்கிறார்.. இவருக்கு போதிய அவகாசம் கொடுத்து மீண்டும் அணியில் சேர்க்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.. இந்த நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட இந்திய டி20 அணியில் வேக பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ள பிசிசிஐ ஆவேஷ் கானை நிராகரித்துள்ளது.
பிசிசிஐ எடுத்த இந்த முடிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ஸ்டாண்ட் பை வீரர்களாக முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்து இருக்கின்றனர்.. ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பந்துவீச்சு ஓரளவு பலமாகவே இருந்த நிலையில், தற்போது பும்ராவும், ஹர்ஷல் பட்டேலும் இணைந்து இருப்பதால் கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.. இந்த வலுவான பந்துவீச்சு பலத்தை கொண்டு உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் :
முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.