அமைச்சர் சேகர் பாபு எள் என்று சொல்வதற்கு முன்னாடியே எண்ணெயாக நிற்கக் கூடியவர் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்,
அறநிலை துறை அமைச்சராக இருக்கக் கூடிய அருமை சகோதரர் சேகர்பாபு அவர்கள் அறநிலைத்துறை பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை சேகர்பாபு என்று அழைப்பதை விட செயல் பாபு என்றுதான் அழைக்க வேண்டும். அதுதான் அவருக்கு பொருத்தமாக இருக்கும். அந்தப் பெயருக்கு முழு தகுதி படைத்தவராக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் சட்டமன்றம் முடியவில்லை. 13ஆம் தேதி தான் முடிய போகுது..
ஆனால் அறிவித்து ஒரு வார காலத்திற்குள், சட்டமன்றம் முடிவதற்கு முன்னால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால் அது சேகர் பாபு அறநிலை துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள துறையின் திட்டம் தான். பொதுவாக எள் என்றால் எண்ணெய் என்று நிற்பார்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் சேகர்பாபுவை பொருத்தவரை அப்படி சொல்ல வேண்டியதில்லை. எள் என்று சொல்வதற்கு முன்னாடியே எண்ணெயாக நிற்கக் கூடியவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.