மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் தயங்கியபடியே மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் 10 ஆயிரம் ரூபாயை ஏழு முறை நிவாரண நிதியாக கொடுத்த பூல்பாண்டியன், தற்போது எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கியுள்ளார். அவர் யாசகம் பெற்ற பணம் 10,000 ரூபாய் வீதம் தற்போது வரை 80 ஆயிரம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியிருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூல்பாண்டியன் கூறுகையில், “யாசகம் பெரும் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்குவதால் பொதுமக்கள் மரியாதை செலுத்துகின்றனர். நான் இருக்கும் வரை மற்றவர்களுக்கு இரக்கம் காட்டி உதவி செய்ய விரும்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.