ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால் பாடம் புகட்டப்படும் என சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின் யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில் நடமாட முடியாது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்டாயமாக ஆட்சியைப் பிடிக்கும். மாற்றமில்லை இது சத்தியம். மேலும் பா.ஜ.க.வுடன் இணைந்து பயணத்தை தடுக்க முயற்சிக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். ஏனென்றால் பல்வேறு பிரச்சனைகளால் நாடு போராடி வருகிறது.
மேலும் இந்தியாவில் சமீப காலமாக ஊழல் தலைவிரித்தாகிறது. மேலும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் எந்த பணி செய்தாலும் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அதிலும் முக்கியமாக கர்நாடக அரசு ஊழலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததுமுதல் வகுப்பு வாதமும், மதவெறி அரசியலும் நடந்து வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் விவசாயிகள் என அனைவரும் உள்ளுக்குள் அச்சம் கொள்கின்றனர். ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீது பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம், ஒரே சின்னத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என அவர் கூறியுள்ளார்.