நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக குழுவின் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கியது.
நீலகிரி உட்பட நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கட்டடம் கட்ட தடை விதிக்கக் கோரியும் ரங்கராஜன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் கட்டடங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை வழங்குமாறு கடந்த 2018 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து யானை வழித்தடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் அண்மையில் இந்த சீலிடப்பட்ட கட்டடங்கள் மீண்டும் இயங்குவதாக உச்சநீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
ரிசார்ட்கள் இயங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
குழுவில் இடம் பெறுபவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு ஒரு நாள் கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டது. தமிழக அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் ஒரு நாள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.