Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யானைத்தந்தம் பதுக்கிவைப்பு… இருவர் கைது.. 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்…!!

யானைத்தந்தம் பதுக்கி வைத்திருந்த நபர்களை கண்டறிந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையம்புதூர் பகுதியில் சிலர் யானை தந்தத்தை பதுக்கி வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் வசிக்கும் சதீஸ்குமார் என்பவரது வீட்டில் திருச்செங்கோடு டி.எஸ்.பி சண்முகம் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.6 கிலோ யானை தந்தத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து, சதீஸ்குமாரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின், சதீஸ்குமாரை நாமக்கல் வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு, யானை தந்தம் எங்கிருந்து வந்தது? யார் மூலம் திருச்செங்கோடு கொண்டு வரப்பட்டது? மேலும், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்ற கோணத்தில் மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தொடர்ந்து விசாராணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “திருச்செங்கோட்டில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட யானை தந்தம் 2.6 கிலோ எடை கொண்டது. அது 20 வயதுடைய யானையின் தந்தமாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |