யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற குற்றத்திற்காக 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது 2 அடி நீளமுடைய நான்கு யானை தந்தங்கள் சாக்கு முட்டையில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் குண்டுசெட்டிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகர்(45) என்பது தெரியவந்தது.
இவர் பர்கூர் மலைப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பன்(35), மகேந்திரன்(30), ராசு(40) ஆகியோருடன் இணைந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் யானை தந்தங்களை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் யானை தந்தங்கள் எவ்வாறு கிடைத்தது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.