உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து காட்டு யானை ரிவால்டேவை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு அழைத்துச் செல்லும் முயற்சி தோல்வி அடைந்தது.
பொக்காபுரம் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிய ரிவால்டேவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே மாவனவல்லா பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க ரிவால்டே என்ற ஆண் யானை 10 ஆண்டுகளுக்கு மேலாக சுற்றி வந்தது. தும்பிக்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லாத அந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம்மடைந்தனர்.
இதனை அடுத்து அந்த ஆணையை காட்டுக்குள் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மயக்க ஊசி செலுத்தாமல் யானையை நடத்தியே வனப்பகுதிக்குள் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. கரும்பு, வாழைப்பழம், தர்பூசணி போன்றவை உணவாக வழங்கப்பட்டு இரண்டு நாட்களாக இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அந்த யானை வனத்துறைக்கு போக்கு காட்டி பொக்காபுரம் வனப்பகுதிக்கு திரும்பி ஓடியது. அதை தடுத்து நிறுத்தும் வனத்துறையினரின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. தற்போது ரிவால்டே யானையை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.