தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி முதல் முதலாக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளுக்கும் தம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே தேர்வு செய்து விட்டார். வேட்பாளர்களில் 117 பேர் பெண்களும் 117 பேர் ஆண்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை திருச்சி திருவாரூர் உள்ளிட்ட 36 தொகுதிக்களுகான வேட்பாளர்களுடன் தஞ்சாவூரில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சீமான், தங்களிடம் போதிய அளவிற்கு பணவசதி இல்லை, பொருளாதார வசதி இல்லை. இந்த சூழலில் விரைவில் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டுமென்றால் முன் கூட்டியே வேட்பாளர் யார் என்று அறிவித்தால் தான் அனைத்து வேட்பாளர்களும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை சந்திக்க முடியும்.
மக்களுக்கு அவர்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்த முடியும். அதனால்தான் முன்கூட்டியே தாங்கள் வேட்பாளரை அறிமுகப்படுத்துவதாக அறிவிப்பு கூட்டமானது நடைபெறுகின்றது என தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் என ஒரு படையே இருந்தாலும் நாம் தமிழர் கட்சி மட்டும் தான் முதல் முதலாக வேட்பாளரை அறிவித்துள்ளது.