மதுரை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம் மேலூரில் சிவகாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சுயேட்சை வேட்பாளராக மேலூர் தொகுதியில் நிற்கிறார். இந்நிலையில் சிவகாமி மேலூரிலிருந்து நான்கு கண் பாலத்திற்கு அருகே காரில் சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மறித்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததோடு மட்டுமல்லாமல் அவரையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவகாமி உயிர் பிழைப்பதற்காக தப்பி ஓடியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் சென்றதையடுத்து சிவகாமி மேலூரிலிருக்கும் காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்று காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.