11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்கு கத்தியுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் பள்ளிக்கு சரிவர வராமலும், ஒழுக்கமில்லாத செயல்களில் ஈடுபடுவதால் ஆசிரியர்கள் அவரது பெற்றோரை அழைத்து கண்டித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவன் கடந்த 16ம் தேதி பள்ளிக்கு கத்தியுடன் வந்து ஆசிரியர்களை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து 17ஆம் தேதியும் அந்த மாணவன் மீண்டும் கத்தியுடன் பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை மிரட்டியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அந்த மாணவன் கத்தியுடன் ஆக்ரோஷமாக பேசி வெளியிட்ட வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கழுத்த அறுக்க முடியுமா?, குத்த முடியுமா?. போலீசாரை குத்துவதற்கு எனக்கு திறமை இருக்கு. ஏறினால் ரயிலு, இறங்கினால் ஜெயிலு, போட்டா பெயில். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.