முதல்வர் கொரோனா ஆய்வு என்ற பெயரில் ‘ஷோ’ நடத்தி கொண்டு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று திமுக கூட்டணி நடத்திய போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் – சகித்துக்கொள்ள முடியாமல் – தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம்.
ஊர் ஊராகச் சென்று பார்க்கிறாராம்? மக்களையா? மக்களைப் பார்த்தால் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்! ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை – கட்சிக்காரர்களை அழைத்து உட்கார வைத்து, ஒரு ‘ஷோ’ நடத்திவிட்டு – கொரோனா ஆய்வு என்ற பெயரில் சென்று, பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, இவராகவே பதில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எனக்கு வேலையே இல்லை என்கிறார். உங்களது வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் என்னுடைய வேலை! அதுதான் எதிர்க்கட்சித் தலைவருடைய வேலை!
எப்போதும் அறிக்கைவிட்டுக் கொண்டே இருக்கிறேன் என்கிறார். ‘அறிக்கைவிடாமல் அவியலா செய்ய முடியும்’ என்று நான் கேட்டேன். ‘அறிக்கை நாயகன்’ என்ற பட்டத்தையும் அவர் எனக்கு அளித்தார். முதலமைச்சரே அந்தப் பட்டத்தைத் தருகிறார்; நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் நான் உங்களுக்குக் கொடுத்த பட்டம்தான் ‘ஊழல் நாயகன்’. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும், “நான் விவசாயி… நான் விவசாயி…” என்று சொல்வதோடு “எனக்கு என்ன விவசாயம் தெரியும்” என்று கேட்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் 1957-ஆம் ஆண்டு முதன்முறையாக குளித்தலையில் வெற்றி பெற்ற அவர், நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தியது பற்றி இங்கே டி.ஆர்.பாலு அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஒரு வரலாற்றை நினைவுபடுத்துகிறேன், “சட்டமன்ற உறுப்பினராகப் பேசிய முதல் கன்னிப்பேச்சே, விவசாயிகள் போராட்டம் பற்றியதுதான்”. அவருடைய மகன் நான் என ஸ்டாலின் குறிப்பிட்டார்.