நடிகர் ரஜினியை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அவ்வாறு ரஜினியை கலாய்த்து மீம்ஸ் போடுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை காயப்படுத்தும் வகையில் யாரும் மீம்ஸ் போட வேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஜினி, தமிழருவி மணியன் உள்ளிட்டோர் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் சமூக வலைதளங்களில் இழிவான வகையில் விமர்சனம் வைப்பதை தவிர்க்க வேண்டும். ரஜினி கட்சி தொடங்குவது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பதை நான் ஆராய விரும்பவில்லை என்று வைகோ தெரிவித்துள்ளார்.