உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்காக நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் கீவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் இருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கடும் போர் சூழல் நிகழும் சமயத்தில் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது இல்லை. குறிப்பாக ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம். அங்கு அமலில் உள்ள ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட பின் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரிக்கும் சமயத்தில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.