அரசின் தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட 1600பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததை தொடர்ந்து வேளாண் திருத்த சட்ட மசோதா இயற்றப்பட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், விவசாயிகளின் விலையை கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பார்கள் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் கட்சியினர் விமர்சித்து வந்தனர். மேலும் விவசாய சங்கங்களும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 25 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வரும் இந்த போராட்டத்தில் விவசாயிகள் உயிர் இழந்த நிலையும் ஏற்பட்டு நாடு முழுவதும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச வேண்டும், அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும், வேளாண் திருத்த சட்ட மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தாலும், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
விவசாயிகளும் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை, எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறி வருகின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து ஆறு மாதம் ஆனாலும் போராட்டம் நடத்துவோம் என்று, அதற்கான தயாரிப்புகளோடு போராட்டத்தை விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல மாநிலங்களிலும் மாநில அரசுகள், எதிர்க் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
தமிழகத்திலும் கூட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. திமுக கூட்டணி சார்பாக இன்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பேரிடர் காரணமாக விதிக்கப்பட்ட தடையால் திமுகவின் போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, திமுக உள்ளிட்ட கட்சி கூட்டணி கட்சியினர் காலை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது திமுக நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற 1600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கனிமொழி, டி ஆர் பாலு, திருநாவுக்கரசர், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட 1600 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறி போராட்டம் நடத்துவது என மூன்று பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.