ஸ்டாலின் ஒரு நாளும் பிரதமராக முடியாது என திருமாவளவனுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்து பேசியுள்ளார் .
சமீபத்தில் விசிக-வின் தலைவர் திருமாவளவன், “குஜராத் மாநிலத்தின் பிரதமராக இருந்த மோடி, நாட்டின் பிரதமராகும்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக முடியாதா” என பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ஒரு தேசியவாதியாக இல்லாத ஸ்டாலின், நாட்டின் பிரதமராக முடியாது” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம். ஆனால், அவர் ஒரு தேசியவாதியாக இருக்க வேண்டும். பிரிவினைவாத தீய சக்திகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றும், இந்த தேசத்தை நேசிக்க வேண்டும். கலாசாரத்தை மதிக்க வேண்டும். ஊழல் சிந்தனையற்று இருக்க வேண்டும். தேச விரோத தீய சக்திகளோடு உறவு கொள்ளாதவராக இருக்க வேண்டும். எந்த ஒரு மதத்தையும் வெறுக்காமல் இருக்க வேண்டும். பெரும்பான்மை ஹிந்துக்களின் வாழும் முறையான சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்களாக இருக்கக்கூடாது. எனவே இவை அனைத்தும் ஸ்டாலினிடம் இல்லாததால், அவர் பிரதமராக முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடியைத் தவிர யாரையும் பிரதமராக ஏற்க, நாட்டு மக்கள் தற்போது தயாராக இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.